<$BlogRSDURL$>

9.5.21

 

வயலும் வாழ்வும்

 

ஆலமரக்கிளையழகே அதிலாடும் என் அஞ்சுகமே

அன்னம்தன்னை தந்ததாரு நீ அறிவாயோ

அன்னை நான் கொடுத்திடுவேன் என்பாயோ !

 

உண்டிகாய  பாடுபட்டு உழுதநிலத்தில் விதைவிதைச்சு

நாள்தோறும் பராமரிச்சு களைபறிச்சு உரமளிச்சு

வெள்ளாமை வீடுசேர வகைசெய்வான் உழவன்தானே !

 

விளைஞ்சயாவும் வாங்கிட வந்திடுவான் இடைத்தரகன்

பாதிவிலை தந்திடுவான் ரத்தம்உறிஞ்சி  போய்விடுவான்

பின்னேவரும் கடன்காரன் மீதிஉயிர் எடுத்திடுவான் !

 

பருவம் துணைநின்றாலும்  வெள்ளாமை கூடினாலும்

இங்கு விவசாயி முழுப்பயன் கண்டதில்லை

ஓர்நாளும் அவன் வயிறு நிறைஞ்சதில்லை !

 

குலசாமிக்கு படையல்வெக்க மூணுவருச தவணையம்மா

குதிரபொம்மை கேட்டப்பொண்ணும் தாவணிக்கு மாறிட்டா

குலைநடுங்கும்  அரசாங்க கொள்கைமட்டும் மாறவில்லை !

 

மனுமேல மனுபோட்டு ஏதுமிங்கு நடக்கவில்லை

மாவட்ட ஆட்சியர்தான் மாற்றலாகி போனாரே

உறியடிச்ச  பானைபோல  உழவன்மனசு நொறுங்கிச்சே ! 

 

போராட்டமே அவன் வாழ்வு என்றாகிப்போச்சே

கெங்கைபோல கண்ணெல்லாம் நீரைத்தான் பெருக்கிச்சே

உறவோடு உயிர்மாய்க்க வழிவகை தேடுச்சே !

 

உழவின்றி எல்லோருக்கும் உணவுண்டோ கண்ணே

பல்லுயிர்காத்தவன நாம் காக்க வேணுமம்மா

ஆளாகி நீவந்து ஆவண செய்திடம்மா !

 

ஆலமரக்கிளையழகே அதிலாடும் என் அஞ்சுகமே

அன்னம்தந்தவன் வாழ்வை  நீ அறிந்தாயோ

அவன் செழித்திட வழிவகை காணாயோ !

 

                               -ஈரோடு  ந.குமரேசன்


|

31.1.21

வெற்றி வெகுதூரமில்லை  

 தணிந்திடுமோ என் தாகம் 

பனித்துளிகளே  உம்  ஸ்பரிசத்தால் 

ஆதவன் தான் வெகுண்டிடுவான் 

மேகங்களாய் உம்மை  கவர்வான் 

தீராத உங்கள் மையலிலே  

மழை தன்னை  பிரசவிப்பீர் 

பூமி என்னை குளிர்விப்பீர் 

பல்லுயிரும் இங்கு பயனுறும் !


வென்றது யார் இங்கே 

கொண்டது யாது காண் ?

எட்டாத கனி என்று 

ஏதும்  இங்கு இல்லை 

தனிப்பட்ட வெற்றி என்றொன்று 

இவ்வுலகில் ஏதும் இல்லை 

இயற்கையின்  சுழற்சிதன்னில் யாவரும் 

இட்டபணி செய்தல் வேண்டும்!


தன்னைத்தாண்டிய சிந்தை வேண்டும் 

மானுடம் தன்னை மேம்படுத்த 

இவ்வுலகை மேலும் சீர்படுத்த 

பொருள் தேடும் கூட்டத்தில் 

தொலைந்து போன விழுமியங்களை 

தலைமுறைக்கு எடுத்து உரைத்து 

மனங்கள் அனைத்தும் மீட்டெடுத்தால் 

ஆக்கங்கள் இங்கு சாத்தியமே!


வெற்றி அது வெகுதூரமில்லை 

தொடரட்டும்  நம் முயற்சிகள் 

கடமைகள் யாவும் செம்மையுற 

செவ்வனே நாம் செய்திடுவோம் 

காலம் அது துணைசெய்யும் 

கனவுகள் உயிர் பெறும் 

மக்கள் யாவரும் பயன்பெற்று 

கூடி நம்மை வாழ்த்திடுவர் !


- ஈரோடு ந,குமரேசன் 


|

22.1.21

வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு  

 வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு 


உள்ளப்பெருங்குழியில் ஓராயிரம் கனவுகள் 

விண்ணையும் தொட்டுவிட பெருந்திட்டங்கள் 

முயன்று பாரடா நீ 

கனவுகள் மெய்ப்பிக்க பிறந்தவனடா !


உன்னுள்ளம் அறிந்த யாவும் 

இவ்வுலகம் உணர  வேண்டும் 

ஊக்கம் கொள்ளடா நீ 

உரிய வாய்ப்பைத் தேடடா !


நட்டவிதை கூட  நாளும் 

மண்ணில் வளரத் துடிக்குமடா  

முட்டிமோதி தான் அது 

தனி வழி அமைக்குமடா !


நீரைத்  தேடிய பயணத்தில் 

அது வெற்றி கொள்ளுமடா 

பின் நிமிர்ந்து நின்று 

எல்லோருக்கும் நிழல் தருமடா !


மழையும்வெயிலும் தாங்கி நிற்கும் 

அது மமதை கொள்ளாதடா 

உறுதியொன்றே  உரமாய் நீ 

கொண்டு உயர்ந்து நில்லடா !


அறிவோடு ஆற்றலும் சேர்ந்தால் 

இங்கு பல்லாயிரம்  வாய்ப்புகளடா 

பேரார்வம் கொண்டு நீ 

உழைத்திட வழிகள் புலப்படுமடா !


உற்ற வழியை இலக்கின்

துணையால் உணர்ந்து கொள்ளடா

கொண்டகனவுகள் யாவும் நீ 

வென்றாய் என்று முரசறையடா !


- ஈரோடு ந.குமரேசன்  








|

9.1.21

காலமெனும் மருந்து 

 காலமெனும் மருந்து 


ஊழிக்காற்று கொண்டு சேர்க்கும் செய்திகள் 

அவனிதனில் யாரும் அறிந்திரா வலிகள் 

கட்டிய பல பல கோட்டைகள் 

திறவாமலே எங்கும் தொங்கிய பூட்டுகள் 


ஆழிப்பேரலையின் எட்டி பறித்த கைகள் 

ஆழ்மனதினில் என்றும் ஆறா ரணங்கள் 

விட்டிலாய் பல பல உறவுகள் 

விட்டுபோனதால் முகவரி தொலைத்த உயிர்கள் 


யுத்தபூமி கற்று தந்த பாடங்கள் 

யுகயுகமாய் மனிதம் உணரா மாண்புகள் 

பட்டென பல பல பிரிவுகள் 

அரங்கேறியதால் தூக்கம் இழந்த விழிகள் 


மௌனம் கிளர்ந்து எழுப்பும் பேரோசைகள் 

அன்புடை நெஞ்சின் நீங்கா சுடுப்புண்கள் 

மனதினில் பல பல எண்ணங்கள்

பாசக்கயிறாய் மாறி நிற்கும் மாயங்கள் 


இன்னும் இங்கே உண்டு பல்லாயிரங்கள் 

அந்த ஆதவனும் கண்டிரா பரிதவிப்புகள் 

மனமெனும் மாயாவியின் போராட்டத்தை வென்றவர்கள் 

உலகினிலே காலத்தை மருந்தாய் உண்டவர்களன்றோ?!


                                                 - ஈரோடு ந .குமரேசன் 



|

31.12.20

உலகம் உன் வசம் 

உன்  முனைப்பு உலகிற்கு பயன்தரட்டும் 
உலகம் உன்  வசம் என்றாகட்டும். !!

 அகம் நிறைந்து பொங்கி பிரவாகிக்கட்டும் 
ஆழ்மனதில் ஊற்றாய்  அன்பு சுரக்கட்டும் 

இன்முகம் என்றும் உன் முகமாய் இருக்கட்டும் 
ஈகை எனும் குணம் மிகுந்திருக்கட்டும் 

உரிமைக்கு குரல் ஓங்கி ஒலிக்கட்டும் 
ஊக்கம்  உன்  உடல்மொழி ஆகட்டும்
 
எளிமையே உன் இயல்பாய் விளங்கட்டும்
ஏறுபோல உள்ளமென்றும் உறுதியாய் திகழட்டும் 

ஐம்புலன்கள் யாவும்  கட்டுண்டு நடக்கட்டும் 
ஒற்றுமை நல்லிணக்கம்  செயலில்  மிளிரட்டும் ...

அது..

ஒளடதத்தை  காலத்தே கையில் சேர்த்திடட்டும் 
எஃகுபோல் இவ்வுலகம் ஆரோக்யம் கொள்ளட்டும் 

உன்  முனைப்பு உலகிற்கு பயன்தரட்டும் 
உலகம் உன்  வசம் என்றாகட்டும். !!
++

|

1.4.19

கண்ணம்மா 

கண்ணம்மா கண்ணம்மா நானொரு கனவு கண்டேனடி
காதோடு நீ வந்து ஏதோ சொல்லும்படி

நெஞ்சோரமாய் நெஞ்சோரமாய் ஒரு மின்னல் அடிக்குதடி
உள்ளமெல்லாம் இனம் புரியா பேருவகைக் கொள்ளுதடி

சொல்லாமலே சொல்லாமலே அனைத்தும் விளங்குதடி
நீ சிந்தும் புன்னகையில் உள்ளம் சிதறுதடி

விழிகளோ விழிகளோ பருவ வித்தைகள் செய்குதடி
வேலிகள் தாண்டவே மனம் ஆவல் கொள்ளுதடி

பொருத்தமாய் பொருத்தமாய் பல காரணங்கள் தோணுதடி
உன்னோடு நேரம் கழிக்கவே அவையனைத்தும் சொல்லுதடி

சில்லென்று சில்லென்று சில  மழைத்துளிகள் விழுகுதடி
சிலேடையாய் நீ உதிர்த்த சொற்கள் தெரிக்குதடி

என்னுள்ளே என்னுள்ளே ஏகாந்தம் பரவுதடி
ஏதேதோ எண்ணி மனம் தவிதவித்து நிற்குதடி

பார்க்காமலே பார்க்காமலே நாட்கள் நரகமாகுதடி
பாவையே உன் கை வலையோசை என் காதிலொலிக்குதடி

போதாமலே போதாமலே குளிர் காற்றும் வீசுதடி
எங்கிருந்தோ வரும் உன் வாசனைமட்டும் என்  நாசி துளைக்குதடி

தாங்காமலே தாங்காமலே என் இதயம் சிலிர்க்குதடி
கடுங்குளிரிலும் உடலெங்கும் ஓர் உஷ்ணம் பரவுதடி

அருகிலே அருகிலே ஏனோ நீயும் இல்லையடி
நம் நி்னைவுகள் மட்டும் என்னோடு கபடியாடுதடி

நினைவிலே நினனவிலே ஒவ்வொன்றாய் சிலாகிக்கிறேனடி
உண்மையில் இந்த க்‌ஷணம் தான் வாழ்கிறேனடி

கண்ணம்மா கண்ணம்மா நீ ஏதும் சொல்லவேண்டாமடி
நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள்ளடி

விரைவிலே விரைவிலே உன்னைச்சேரும் நாள் வருமடி
அதுவரை இந்தக்கனவுக் கலையாமல் பார்த்துக்கொள்ளடி.

|

haikoo-feb 19 

நட்சத்திரங்களே துணை
 விழிகள் தேடா உறக்கத்தில்
விடியலைத் தேட!!

-------------------------------------------------------------------------

ஏ மரமே! வா வெளியே
மாற்றம் வேண்டும்
விதை பேசுகிறேன்.

|

This page is powered by Blogger. Isn't yours?