<$BlogRSDURL$>

8.4.04

கனவு !(கவிதை நடையில் ஒரு சிறுகதை முயற்சி) 

அப்பத்தா?!
கனவுன்னா என்ன?
எப்ப வரும்?!.

சொல்லிபுட்டு வருமா?
கனவு?!
அதுவாத்தேன் வரும்.

பள்ளிகூடத்துல!
அல்லாரும் சொல்லராங்களே!
அவுங்க கனவு என்னன்னு!

சொல்லாட்டி!
வாத்தியாரு அடிப்பாரு!
சொல்லு அப்பத்தா!

கருக்கல் இருந்து
தொங்கிட்டு இருக்க!
சோளி கடக்குதுல்ல!

பொறவு
அப்பத்தாளும் வெலுத்துப்புடுவேன்!
நகரு அங்கிட்டு!

சிவகாமி!
புள்ளைய தூக்கிட்டு போ!
கழனி வரை போயாரேன்!

ஆத்தா! ஆத்தா!
நீயாவுது சொல்லாத்தா!
கனவுன்னா என்ன?

அது ராவுல!
ஒறங்குனதுக்குப் பொறவு
வரும் ராசா!

ஒறங்குனதுக்குப் பொறவா!
எப்படியாத்தா வரும்!
எங்கிட்டுருந்து வரும்!

சரியா போச்சு போ!
உங்கொப்பன் வந்ததும்
அவருகிட்டியே கேளு!

சிவகாமி! சிவகாமி!
மனுசனுக்கு நாக்கு வரளுது
மோரு கொண்டா புள்ள!

அப்பா!அப்பா!...

என்னடா !
முட்டாய் வேணுமா!
இந்தா சாப்புடு!

அதில்லப்பா!
கனவு பத்தி சொல்லுப்பா!
வாத்தியாரு கேட்டாரு!

என்னது! கனவா?!
அதுக்கு எனக்கெங்க நேரம்!
ராப்பகல்லா தூங்காம கெடக்கேன்!

அவனுக்கு யாருமே
பதில் சொல்லவில்லை
ஒரு வழியாய் தூங்கி போனான்.

காலையில் பள்ளிக்கு
பயந்து பயந்து
சென்றான்.

பக்கத்து பெஞ்சு
நண்பன்....

"டாக்டர்"
ஆகோனும் சார்!-என்றான்
வாத்தியாரின் கேள்விக்கு!

இவன் முறைவர
இவனும்
அதையே சொல்லி வைத்தான்.

பாவம்
கடைசி வரை அவனுக்கு
கனவு என்றால் என்ன்வென்று தெரியவில்லை.



|

7.4.04

என் ஜன்னல் உலகம்! 

ஆய்வுகூடத்தில்
என் இருக்கை
முன்னே அரை-ஆளுயர ஜன்னல்!

உள்ளே
நான் நுழைந்ததும்
திறப்பது இதைத்தான்!

ஒளிவெள்ளம்
பெருகி என்
வேலை துவங்க ஊக்கம்தரும்.

இடையிடையே
பணிக்களைப்பில் என்
பார்வை ஜன்னலுக்கு வெளியே.

அழகான
மஞ்சள் பூமரம்
காற்றோடு சண்டைப் பிடிக்கும்.

எங்கிருந்தோ
வரும் குருவிகள்
அதில் கொஞ்சம் இளைப்பாறும்.

சற்று தள்ளியிருக்கும்
வண்டிகள் நிறுத்துமிடம்
உலகமயமாக்கலை பறைசாற்றும்.

மீண்டும்
மனம் என்
வேலைகளில் பதியும்.

மஞ்சள்நிற-தபால்வண்டி
கவனத்தை ஈர்க்கும்
"மணி 11.00"-என்று சொல்லாமல் சொல்லும்.

எப்போதவது "சைரன்"-ஒலி
விண்னைப் பிளக்கும்
எங்கோ உயிரல்லாடுவதை உணர்த்தும்.

ஒன்றன்பின்
ஒன்றாக சீறும் வண்டிகள்
மதிய இடைவேளையை அறிவிக்கும்.

எப்போது
திரும்பி வரும்
யாருக்கும் தெரியாது வராமலும் போகலாம்.

பக்கவாட்டில்
உள்ளது ஒரு தோட்டம்
மதியநேர விளையாட்டு மைதானம்.

இது
முதியவர்களின் 'நடை'பழகுமிடம்
குழந்தைகளின் 'வால்'வளருமிடம்.

பள்ளி
மூடும் நேரமானால்
கொத்து கொத்தாய் சிறார்கூட்டம்.

இரை
தேடிய பறவைக் கூட்டம்
கூடு தேடி ஓட்டம்.

சிறிது நேரத்தில்
(மறுபடியும்) சீறும் வண்டிகள் விடைபெறும்
மாலைவகுப்பிற்காய் சில நுழையும்.

இதோடு
என் ஜன்னலும்
மூடிக் கொள்ளும்!

|

6.4.04

ஏழ்மை 

விலை என்ன?
வருபவர்களின்
முதல் கேள்வி-இது தான்!
சந்தையிலே!
பொருளில்லா கடையிலே
என்னை விற்க
நான் என்ன விலை சொல்ல?!

|

This page is powered by Blogger. Isn't yours?