<$BlogRSDURL$>

9.5.21

 

வயலும் வாழ்வும்

 

ஆலமரக்கிளையழகே அதிலாடும் என் அஞ்சுகமே

அன்னம்தன்னை தந்ததாரு நீ அறிவாயோ

அன்னை நான் கொடுத்திடுவேன் என்பாயோ !

 

உண்டிகாய  பாடுபட்டு உழுதநிலத்தில் விதைவிதைச்சு

நாள்தோறும் பராமரிச்சு களைபறிச்சு உரமளிச்சு

வெள்ளாமை வீடுசேர வகைசெய்வான் உழவன்தானே !

 

விளைஞ்சயாவும் வாங்கிட வந்திடுவான் இடைத்தரகன்

பாதிவிலை தந்திடுவான் ரத்தம்உறிஞ்சி  போய்விடுவான்

பின்னேவரும் கடன்காரன் மீதிஉயிர் எடுத்திடுவான் !

 

பருவம் துணைநின்றாலும்  வெள்ளாமை கூடினாலும்

இங்கு விவசாயி முழுப்பயன் கண்டதில்லை

ஓர்நாளும் அவன் வயிறு நிறைஞ்சதில்லை !

 

குலசாமிக்கு படையல்வெக்க மூணுவருச தவணையம்மா

குதிரபொம்மை கேட்டப்பொண்ணும் தாவணிக்கு மாறிட்டா

குலைநடுங்கும்  அரசாங்க கொள்கைமட்டும் மாறவில்லை !

 

மனுமேல மனுபோட்டு ஏதுமிங்கு நடக்கவில்லை

மாவட்ட ஆட்சியர்தான் மாற்றலாகி போனாரே

உறியடிச்ச  பானைபோல  உழவன்மனசு நொறுங்கிச்சே ! 

 

போராட்டமே அவன் வாழ்வு என்றாகிப்போச்சே

கெங்கைபோல கண்ணெல்லாம் நீரைத்தான் பெருக்கிச்சே

உறவோடு உயிர்மாய்க்க வழிவகை தேடுச்சே !

 

உழவின்றி எல்லோருக்கும் உணவுண்டோ கண்ணே

பல்லுயிர்காத்தவன நாம் காக்க வேணுமம்மா

ஆளாகி நீவந்து ஆவண செய்திடம்மா !

 

ஆலமரக்கிளையழகே அதிலாடும் என் அஞ்சுகமே

அன்னம்தந்தவன் வாழ்வை  நீ அறிந்தாயோ

அவன் செழித்திட வழிவகை காணாயோ !

 

                               -ஈரோடு  ந.குமரேசன்


|

This page is powered by Blogger. Isn't yours?