11.6.04
90 வயசு வாலிபர்
எங்க கல்லூரி புண்ணியத்துல.... இரண்டு மாசத்துக்கு முன்னாடி 90 வயசு பெரியவர்.. இல்லை.. தப்பு. .வாலிபர் ஒருத்தரை சந்தித்தேன்.அவர் வந்தது "சைக்கிள்" வண்டியில். ஒரு மணி நேரம் அவரும் நானும் பேசிக்கொண்டு இருந்தோம்.பேச்சை அவர் ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போர்ல இருந்து... பின்ன இருக்காதா?! அவரு தீவிரமா அமெரிக்க படைகள் எதிர்த்து சண்டை போட்டவராச்சே!
நம்ம வாலிபர் பேரு அல்போன்ஸ் முல்லர். ஜெர்மன் ஹிட்லர் படையைச் சேர்ந்தவரு! ஆளு இன்னும் எவ்வளவு துடிப்பா இருக்காரு தெரியுமா?! வாரத்துல ஒரு நாளு மீன் கணக்கா நீந்தராரு... அப்புறமா சூடா ஒரு நீராவிக்குளியல் .. ம்க்கும்.. நீங்க பெருமூச்சு விடரது கேட்குது! பெண்கள் விசயத்துல ஆளு எப்படின்னு கேட்க வரீங்கதானே: ஆளு இதுல நம்ம ராமருங்க!! 60 வருசமா ஒரே மனைவிங்க..அவுங்க பேரு சோபி முல்லர்.
இரெண்டு பேரும் இணைபிரியா தம்பதிகள். வரும் ஜூலை 15,2004 அவுங்களோட 60 ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவு விழா! வாழ்த்த வயதில்லை நமக்கு.. அவுங்க ஆசிகள் நமக்கு கிடைக்கட்டுமே.நம்ம இளைய தலைமுறைக்கு அவர்கள் சொன்னது: வாழ்க்கைல வெற்றிதோல்வி கஷ்டம் நஷ்டம் மாறி மாறி தான் வரும்.எல்லாத்தயும் போராடித் தான் ஜெயிக்கனும். போர் காலத்துல சாப்பாடே இல்லாம கஷ்டப்பட்டோம். அதுக்கு நடுவுலயும் அடைக்கலம் கேட்ட ஒரு ஹங்கேரி குடும்பத்துக்கும் இடம் குடுத்தோம். போருக்கு பின்னாடி விவசாயம் செஞ்சு குடும்பத்தை நடத்தினோம். இன்றைக்கு எல்லோரும் நல்லா இருக்கோம். எப்பவுமே போராடி உழைச்சா வெற்றி நிச்சயம்.
(கவிதை மட்டுமே இடம் பெற்று வந்த இந்த பதிவில்..இனி எல்லாம் கலந்து கட்டி எழுத முயற்சிக்கிறேன்.)
8.6.04
மணமும் மனமும்!!
மனம் திரும்பியது
கால பொறியையும் -ஏன்
ஒளியின் வேகத்தையும்
மிஞ்சிவிட்டது அதன் ஓட்டம்
சட்டென்று இரண்டாம் வகுப்பு
பள்ளி முடிந்து வீட்டிற்கு பயணம்
தெரு முனையிலேயே அதே மணம்
அம்மாவின் கைகள் உருவாக்கும்
ஒரு அற்புத படைப்பு
பண்டிகை நாட்களில் மட்டுமே கிடைக்கும்!
நாளெல்லாம் இதற்காகவே காத்திருப்பேன்
இதோ சில நொடிகளில் கடிபடும்
என் ஆசை "முறுக்கு".