22.1.21
வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு
வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு
உள்ளப்பெருங்குழியில் ஓராயிரம் கனவுகள்
விண்ணையும் தொட்டுவிட பெருந்திட்டங்கள்
முயன்று பாரடா நீ
கனவுகள் மெய்ப்பிக்க பிறந்தவனடா !
உன்னுள்ளம் அறிந்த யாவும்
இவ்வுலகம் உணர வேண்டும்
ஊக்கம் கொள்ளடா நீ
உரிய வாய்ப்பைத் தேடடா !
நட்டவிதை கூட நாளும்
மண்ணில் வளரத் துடிக்குமடா
முட்டிமோதி தான் அது
தனி வழி அமைக்குமடா !
நீரைத் தேடிய பயணத்தில்
அது வெற்றி கொள்ளுமடா
பின் நிமிர்ந்து நின்று
எல்லோருக்கும் நிழல் தருமடா !
மழையும்வெயிலும் தாங்கி நிற்கும்
அது மமதை கொள்ளாதடா
உறுதியொன்றே உரமாய் நீ
கொண்டு உயர்ந்து நில்லடா !
அறிவோடு ஆற்றலும் சேர்ந்தால்
இங்கு பல்லாயிரம் வாய்ப்புகளடா
பேரார்வம் கொண்டு நீ
உழைத்திட வழிகள் புலப்படுமடா !
உற்ற வழியை இலக்கின்
துணையால் உணர்ந்து கொள்ளடா
கொண்டகனவுகள் யாவும் நீ
வென்றாய் என்று முரசறையடா !
- ஈரோடு ந.குமரேசன்